40

மாணவனிடம் 40 ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்

உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார்ச் சைக்கிள் செலுத்திச் சென்ற மாணவனொருவனிடம் அவன் வைத்திருந்த 40 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுவிட்டு மேற்கொண்டு மோட்டார்ச் சைக்கிள் செலுத்திச் செல்லக் கோப்பாய்ப் பொலிஸாரொருவர் அனுமதியளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். ஊரெழுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புன்னாலைக்கட்டுவனிலிருந்து பலாலி வீதியூடாக உரும்பிராப் பகுதியை நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியொன்றில் கல்வி பயிலும் க. பொ.த உயர்தர மாணவனை ஊரெழு அம்மன் கோவிலடிச் சந்தியில் வழிமறித்த கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸாரொருவர் அம் மாணவனிடம் உரிய ஆவணங்களை வினாவியுள்ளார்.

குறித்த மாணவன் தன் வசம் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த போதும் ஏனைய ஆவணங்கள் எதனையும் வைத்திருக்கவில்லை. எனினும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதனைப் பொருட்படுத்தாமல் அந்த மாணவன் செலவுக்காக வைத்திருந்த 40 ரூபாவை வாங்கிய பின்னர் அவனை மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் செல்வதற்கு அனுமதியளித்துள்ளார்.

ஆவணங்களின்றி மோட்டார்ச் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் சாரதிகளிடம் பணத்தைப் பெற்று விட்டு அவர்கள் மேற்கொண்டு பயணிப்பதற்குப் பொலிஸார் அனுமதி வழங்கும் போக்கு அண்மைக் காலமாக யாழில் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.