shr_vic0065

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி போர்க்கொடி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். எனவே மக்கள் தாம் ஏற்கும் கட்சி சார்ந்தவர்களையே தேர்வு செய்யவேண்டும். தனி நபர்களை அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிலைமைகள் தொடர்பாக இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் கட்சிகளை பார்க்காமல் தமக்கு சிறந்த சேவையாற்ற கூடிய தனி நபர்களை தேர்வு செய்யவேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதற்கு பதிலளித்த அவர்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை சாதாரணமாக பார்க்க இயலாது மக்கள் தொடர்சியாக தேர்தல்களில் வழங்கிவரும் ஆணையை வலுப்படுத்தும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும்.

இதில் கட்சிகளை பார்க்காமல் ஆட்களை பார்த்து வாக்களியுங்கள் என கூறப்படும் கருத்துக்கள் கருத்துக்களே அல்ல. மக்கள் கட்சிக ள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே ஆட்களுக்கு வாக்களிக்கிறார்கள்.

குறிப்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். தனி நபராக தேர்தலில் போட்டியிடவில்லை. மாகாணசபையை மத்திய அரசாங்கம் சுயமாக இயக்க அனுமதிக்கவில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அவ்வாறிருக்கையில் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் குட்டி அரசாங்கமான உள்ளூராட்சி சபைகளில் தனி நபர்கள் மக்களுக்கு என்ன சேவையை செய்ய முடியும். ஒரு தனிநபர் ஒரு வீதியை போட இயலுமா? தண்ணீரை பெற்றுக் கொடுக்க இயலுமா? எனவே இவ்வாறான கருத்துக்களில் மக்கள் கருத்தூன்ற கூடாது.

மக்கள் தாம் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என கூறினார்.

மேலும் யாழ். மாநகரசபையின் மேயர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கேள்வி கேட்டபோது,

கட்சி ரீதியாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக நான் அறியவில்லை. இதற்கிடையில் சொலமன் சிறில் பத்திரிகையாளர் வித்தியாதரன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஆனோல்ட் ஜெயசேகரம் போன்றவர்களின் பெயர்கள் பேசப்படுகின்றது.

இவர்களில் யாரை மேயர் வேட்பாளராக போடுவது என்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக இல்லை. இந்த நிலையில் யாரை மேயர் வேட்பாளராக போட்டாலும் வேறு வேலைகள் இல்லாமல் 100 வீதம் மக்களுக்கு சேவையாற்ற கூடிய இனத்தின் விடியலை நோக்கி உளமார நகர கூடிய ஒருவரை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

அதனோடு யாழ். மாநகரம் என்பது தமிழர்களின் அடையாளம். வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்கள் யாழ்.மாநகரை பார்கின்றபோது அவர்கள் யாழ். மாவட்டத்தின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட அடையாளங்களை காண்கிறார்கள். அதனை பாதுகாக்கும் தன்மை கொண்டவரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.