சிறுமி துன்புறுத்தல் – சிறிய தாய் உட்பட இருவர் அதிரடியாக கைது

சிறுமியொருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தாயும், மைத்துனரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் 10 வயது சிறுமியான தர்மராஜ் சர்மிலா என்பவரே துன்புறுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருப்பதாகவும் , தந்தை கொழும்பில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சிறுமி அவரது சிறிய தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாயின் சிறுமி மாதாந்தம் சிறுமியின் கல்வி உள்ளிட்ட செலவுகளுக்காக 15,000 ரூபா அனுப்பி வைப்பதாகவும், எனினும், சிறுமியை அவரது சிறிய தாய் சரியான முறையில் பராமரிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ தினத்தன்று குறித்த சிறுமி அவரது மைத்துனரால் தாக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதுடன், சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரீசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
child6667