????????????????????????????????????

யாழ் மாவட்டத்தில் புளொட் – தமிழ் அரசுக் கட்சி இடையே ஆசனப் பங்கீட்டில் இணக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, யாழ். மாவட்டத்தில் புளொட் சார்பில் கோரப்பட்ட சங்கானை, மானிப்பாய், சுன்னாகம் பிரதேச சபைகளின் ஆசனப்பங்கீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், சுன்னாகம் பிரதேச சபையை புளொட்டுக்கு கொடுக்க இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், மானிப்பாய் பிரதேச சபையை முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ் அரசுக் கட்சியும், அடுத்த இரண்டு ஆண்டுகள் புளொட்டும் நிர்வகிப்பது என்றும் இணங்கப்பட்டது.

சங்கானைப் பிரதேச சபையை முதலிரு ஆண்டுகள் புளொட்டும், அடுத்த அரு ஆண்டுகள், தமிழ் அரசுக் கட்சியும் நிர்வகிப்பதாகவும் இணக்கப்பாடு காணப்பட்டது.

எனினும், இந்த முடிவு குறித்து தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகிகள் கடும் அதிருப்தி வெளியிட்ட நிலையில், நேற்று மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சங்கானைப் பிரதேச சபையை முழுமையாக நான்கு ஆண்டுகளும் தமிழ் அரசுக் கட்சியே நிர்வகிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப்பங்கீட்டு பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளன.