மன்னார் புதிய ஆயருக்கு அருகாக இராணுவம்

சமயப்பணிகளுக்கு அப்பால், தமிழர்களின் 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை சர்வதேச அரங்கில் உரத்துக் கூறிய கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லம், தற்போது மௌனித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனாலும் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஆயர் இம்மெனுவல் பெர்ணான்டோ, சமயப பணிகளுடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுக்கவுள்ளதாக பதவியேற்பு நிகழ்வில் கூறினார்.

முன்னாள் ஆயர் இராஜப்பு ஜோசப் முன்னெடுத்த சமய சமூகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் புதிய ஆயர் இம்மானுவெல் பெர்ணான்டோ வரவேற்பு நிகழ்வில் உறுதியளித்தார்.

ஆயர் இராஜப்பு ஜோசப் சுகவினமடைந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், சமயப்பணியை முற்போக்கான முறையில் மேற்கொள்ளவும், தமிழர் பிரச்சினை தொடர்பாக துணிந்து பேசக் கூடிய ஒருவரை புதிய ஆயராக நியமிப்பதற்கும் ஏற்ற முறையிலும் அருட் தந்தையர்கள் பலர் முயற்சி எடுத்திருந்தனர்.

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை தெரிவு செய்வதற்காக, ஆயர் இராஜப்பு ஜோசப் ஓய்வு பெறுவதற்கு முன்னர், மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான அருட்தந்தையர்கள் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்து வத்திக்கானுக்கு அனுப்பிவைத்தார்.

ஆனால் எதிர்பாராத முறையில், கொழும்பு பேராயர் இல்லத்தில் துணை ஆயராக பதவி வகித்த, இம்மெனுவல் பெர்ணான்டோ, மன்னார் மறை மாவட்டத்திற்கான புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்டார். அதனை பாப்பரசர் வத்திக்கானில் அதிகாரபூர்வமாக அறிவிவத்தார்.

அதேவேளை இம்மெனுவல் பெர்ணான்டோ, மன்னாருக்கான புதிய ஆயராக பதவியேற்ற நிகழ்வு நேற்று சனிக்கிழமை மன்னாரில் இடம்பெற்றபோது, இராணுவத்தினர் அந்த நிகழ்வில் ஆதிக்கம் செலுத்தியதாக மக்கள் கவலையுடன் கூறினார்கள்.

விழாவுக்கான பந்தல்கள், அலங்கார வளைவுகள் அனைத்தும் தள்ளாடிச் சந்தியில் இருந்து ஆயர் இல்லம் வரை இராணுவத்தினரே அமைத்தனர். தேசியக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. இதனால் புதிய ஆயரை வரவேற்கும் நிகழ்வு தொடர்பாக மன்னார் மக்கள் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

வரவேற்பு நிகழ்வில், இராணுவ உயர் அதிகாரிகள் புதிய ஆயருக்கு அருகாக நடந்து வந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மைத்திரி ரணில் நல்லாட்சியில் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக உலகத்திற்கு காட்டப்படுகின்றது. இந்த நிலையில், எதற்காக இராணுவம், புதிய ஆயர் வரவேற்பு நிகழ்வில் தலையிட்டது என்று மக்கள் கேள்வி எழுப்பியதாக செய்தியாளர் தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மன்னார் ஆயர் இல்லம், யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான விடயங்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வந்தது. 1992ஆம் ஆண்டு இரண்டாவது ஆயராக பதவியேற்ற இராஜப்பு ஜோசப் தமிழர் அரசியல் போராட்டத்தை நியாயப்படுத்தும் வேலைத் திட்டங்களில் திவீரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் மூன்றாவதாக நியமிக்கப்பட்ட ஆயர் இம்மெனுவல் பெர்ணான்டோ, யாழ்ப்பாணத்தில் பிறந்தவார். ஆனால் நிண்டகாலமாக கொழும்பில் வாசித்தவர். 2011ஆம் ஆண்டு கொழும்பு துணை ஆயராக நியமிக்கப்பட்ட நாள் முதல், ஆண்மீகப் பணிகளில் கூடுதலாக ஈடுபட்டவர் என கொழும்பு பேராயர் இல்லம் கூறியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள மறை மாவட்டங்களின் நான்கு ஆயர்களும் சமயப் பணிகளுக்கும் அப்பால், தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை சர்வதேச அரங்கில் எடுத்துக் கூறி வருவருதுடன், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் அநீதிகளை, அவ்வப்போது சுட்டிக்காட்டியும் வருகின்றனர்.

அதற்கேற்ற முறையில், புதிய ஆயர் இம்மெனுவல் பெர்ணான்டோ சமயப் பணிகளுடன் தமிழ் மக்கள் எதர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி திர்வு காணும் விடயத்திலும் கூடுதல் அக்கறையுடன் செயற்படுவார் என மன்னார் ஆயர் இல்லம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.chur_mannar010